×

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு திருவாரூர் நோக்கி பகை வெல்லும் பட்டாளமாய் திரண்டிடுவீர்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு பகை வெல்லும் பட்டாளமாய்-அறம் காக்கும் அணிவகுப்பாய் திரண்டிடுவீர் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: திராவிட மாடல் அரசாங்கத்தின் சார்பிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஒருபுறம், அரை நூற்றாண்டு காலம் அவர் கட்டிக்காத்த ஜனநாயகப் பேரியக்கமான திமுகவின் சார்பிலான நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மறுபுறம், கலைஞர் மீது பற்று கொண்ட தோழமை இயக்கத்தினர் கொண்டாடும் நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக, திமுகவினர் அனைவரையும் அழைப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழிகாட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அவரது அன்னையார் – எனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம். திருவாரூரில், தேர் போன்ற வடிவில் கலைஞருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், முத்துவேலரின் பெயரிலான நூலகம், 2 திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

எதிலும் வல்லவர் என்று நான் பாராட்டிய அமைச்சர் எ.வ.வேலு இந்தப் பணிக்குப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். கோவையில் திமுக, தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம், நடந்தேறியிருக்கிறது. கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள இலட்சிய உணர்வினால், சோதனைகளையும் சாதனையாக்கும் வலிமையை திமுகவினராகிய ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் – மாநில உரிமைகளை மீட்கவும் கலைஞர் வழியில் துணிந்து நடைபோடுவோம் என்பதுதான் கோவையில் நடந்த கண்டனக் கூட்டம் விடுத்துள்ள செய்தி. குறுக்கே வரும் தடைகளைத் தகர்த்து நம் பயணம் தொடர்கிறது.

வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைவர் கலைஞர் குறிப்பிட்டது போல, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல.” உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன் கொள்கை வீரர்களாம் திமுகவினரை, ஜூன் 20 அன்று(நாளை) திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். தலைவரின் திருவுருவச் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன்.

அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்புரையாற்றுகிறார். வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளால் முத்தமிழறிஞர் கலைஞருக்கு அவரது திருவாரூரில் புகழ்மாலை சூட்டுகிறோம். ஒவ்வொரு திமுகவினரும் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவர் கலைஞரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்புவிழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய்-அறம் காக்கும் அணிவகுப்பாய் திமுகவினர் திரண்டிடுவீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு திருவாரூர் நோக்கி பகை வெல்லும் பட்டாளமாய் திரண்டிடுவீர்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Artist ,Gotam ,Thiruvarur ,Chief Minister ,G.K. Stalin ,Chennai ,Thimugavanar ,B.C. G.K. Stalin ,
× RELATED கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி